சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி, ரூ.98 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், கடற்பாசி பூங்காக்கள் அமைக்க ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் மூத்த குடிமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 11 பூங்காக்கள், 2 விளையாட்டு திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானங்கள், 16 பள்ளிக்கூடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர் மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை, சீர் மிகு சென்னை, கலாசாரம் மிகு சென்னை உள்ளிட்டவை மூலம் சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக பசுமை சென்னை, தூய்மை சென்னை உள்ளிட்ட முயற்சிகள் மூலம் சென்னை மாநகராட்சியை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி இயற்கை பரப்புகளை அதிகரித்தல், சுவர்களின் வண்ணம் தீட்டுதல், பாலங்களுக்கு கீழ் பகுதிகளை சீரமைத்தல், செயற்கை நீருற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
நான்கு திசைகளிலும் சென்னை மாநகராட்சியில் நுழைவு வாயில்களாக உள்ள பகுதிகளை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இந்த முயற்சி குறித்து ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில், “கோயம்பேடு பேருந்து நிலைம், விமான நிலையம், எழும்பூர் ரயில், சென்டரல் ரயில் நிலையம் ஆகியவைதான் சென்னையில் நுழைவு வாயிலாக உள்ளது. இவற்றை அழகுபடுத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பு உள்ள சாலையில் நடுப்பகுதி செடிகள் நட்டு அழபடுத்தப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நீருற்றுகளும் எழும்பூர் ரயில் நிலையம் முன்பு உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் முன்பு மற்றும் அருகில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. சாலையில் நடுவில் செடிகள் நடப்பட்டுவருகிறது. இதைப்போன்று அசோக் பில்லர் முதல் கோயம்பேடு வரை உள்ள சாலைகளில் நடுவில் செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
இதைத் தவிர்த்து சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 26 செயற்கை நீரூற்றுகள் அமைக்க சென்னை மாநகராட்சி ரூ.1.29 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. இதில் தலைமைச் செயலகம் முன்பு உள்ள பூங்கா, அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளசா சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நீருற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சாலைகளின் பெயர் பலகை அனைத்தும் சிங்கார சென்னை 2.0 திட்ட இலட்சினை உடன் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.8.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக பூங்கா மற்றம் விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணியையும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில் தற்போது 718 பூங்காக்கள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. கூடுதலாக ரூ.100 கோடியில் 150 பூங்கா மற்றும் 50 விளையாட்டுத் திடல்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 18 விளையாட்டு திடல்களை மேம்படும் பணி ரூ.12.57 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதல்வர் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் புராதன சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கண்காணித்தலுக்காக, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையாளர், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தொடர்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிங்கார சென்னை 2.0 திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.’
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.