நாகர்கோவில்: 6 மாதத்திற்குள்  தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் 572 கிராமங்களில் 4ஜி சேவையே கிடைக்கவில்லை என்று மத்தியஅரசு, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், தமிழ்க அமைச்சர் 6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இண்டர்நெட் சேவை வழங்குவோம் என கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,  சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வெகுவிரைவில் முதலமைச்சரின் ஒப்புதலோடு திருத்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி கொள்கை, தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சிதறால் பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை என்றவர், நாகர்கோவில் அருகே கோணம் என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பிரேரணை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். பின்னர் அது விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

மேலும்,  தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 572 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை! மத்தியஅரசு தகவல்..