சென்னை:
பேனா சின்னம் அமைப்பது குறித்து மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவுச்சின்னம் மெரினா கடற்கரையில், அண்ணா நினைவுசின்னம் அருகே அமைந்துள்ளது. அதன் எதிரரே கடலுக்குள், கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில், பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. தற்போது, 2.21 ஏக்கா் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் தமிழக அரசால் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம், வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. நினைவுச் சின்னம் மொத்தம் 8,551.13 சதுர மீட்டா் பரப்பளவில் ரூ.81 கோடியில் நிறுவப்படுகிறது.

அதன் எதிராக, கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கப்பட உள்ளது. அதில், பேனாவுக்கான நிலைமேடை 2,263.08 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்துக்குச் செல்வதற்கான கடலுக்கு மேல் அமைக்கப்படும் கண்ணாடியிலான நடைபாதை 2,073.01 ச.மீ. பரப்பளவிலும்; கடல், நிலத்தின் மேல் அமைக்கப்படும் வலைப்பாலம் 1,856 ச.மீ. பரப்பளவிலும்; கடற்கரையில் அமைக்கப்படும் நடைபாதை 1,610.60 ச.மீ. பரப்பளவிலும்; நினைவுச் சின்னத்திலிருந்து பாலத்துக்குச் செல்லும் நடைபாதை 748.44 ச.மீ. பரப்பளவிலும் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கடலில் 6 மீட்டா் ஆழம் இருக்க வேண்டும். அதுபோல கடல் மட்டத்திலிருந்து 6 மீ. உயரத்துக்கு மேல் நினைவுச் சின்னம் அமைய வேண்டும். கடற்கரையிலிருந்து 360 மீ. தொலைவில் அமையவுள்ள பேனா சின்னத்தின் உயரம் 42 மீ. அதைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்படவுள்ளன. நினைவுச் சின்னத்தை நோக்கி அமைக்கப்படவுள்ள பாலம், தரைப் பகுதியில் 290 மீ. நீளத்திலும், கடலுக்கு மேல் 6 மீ. உயரத்தில் 360 மீ. நீளத்திலும் அமைக்கப்படும். ஆக மொத்தம் 650 மீ. நீளம் கொண்ட அந்த பாலத்தின் அகலம் 7 மீட்டராகும். அதில் 3 மீ. கண்ணாடியாலான தளம் என்று தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்து, அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகள் ஆமைகள் இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும் என்றும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மனு குறித்து, மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது. மேலும், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் காலை பத்தரை மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.