திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் கருவறை மேல் உள்ள ஆனந்த நிலையம் தங்க கோபுரத்தில் வேயப்பட்டுள்ள தங்கத்தகடுகளை மாற்றும் பணி ஒத்திவைக்கப் பட்டு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தங்கமுலாம் பூச தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்திருப்பதாக கடந்த ஆண்டே தகவல் வெளியானது. ஏற்கனவே கடந்த 1957 ஆம் ஆண்டு  தங்க கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்டது. பொன் மூலாம் பூசி நீண்ட காலம் ஆகிவிட்ட காரணத்தால் தற்போது தங்கக்கோபுரம் பொலிவிழந்து காணப்படுகிறது. இதையடுத்து, தங்கத்தகடு மாற்ற தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் 2023  பிப்ரவரி மாதம் தொடங்கப்படும் என்றும், இந்த பணிக்கு   பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கம் பயன்படுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோபுரத்தில் தங்க முலாம் புதுப்பிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜ சாமி கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரங்களில் தங்க தகடுகள் பதிப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிறைவு பெறவில்லை.  மேலும் 3 மாதங்கள் கால அவகாசம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிந்தராஜ சாமி கோவிலில் குறைந்த அளவு பக்தர்கள் வருவார்கள். எனவே 2 ஆண்டுகள் ஆனாலும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஏழுமலையான் கோவிலில் அவ்வாறு இல்லை. ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தினந்தோறும் தரிசனம் செய்யக்கூடிய நிலையில் காலதாமதமாவது சரியாக இருக்காது.

எனவே இதுதொடர்பாக, சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கோபுரத்தில் தங்க முலாம் புதுப்பிக்கும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 முதல் 6 மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டு புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.