சென்னை: சென்னை தீவுத்திடலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சங்கமம் விழாவை, இன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து( சென்னையில் 18 இடங்களில் சென்னை சங்கமம் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

2021ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டுங்ம சென்னை சங்கமம் என்ற பெயரில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை முதலமைச்சர்ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

 ஜனவரி 14ஆம் தேதி (நாளை) முதல் வரும் 17-ஆம் தேதி வரை, செம்மொழிப்பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை சென்னை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், ராமச்சந்திரன்,சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, கிரிராஜன், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து வரும் 17ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை 40 வகையான கலை விழாக்கள் நடைபெறவுள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட 40 வகையான கலைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் – மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் (தெற்கு) முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் – ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் – நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை – மாநகராட்சி விளையாட்டு மைதானம், தி.நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் – இராமகிருஷ்ணா நகர் விளையாட்டு மைதானம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு – ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் – எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் – அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 14.1.2023 முதல் 17.1.2023 வரை மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து என பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது.

4 நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை 30 நிமிட இடைவெளியில் நடனம், இசை நிகழ்ச்சிகள் என்று பலவகையான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகள், பிற மாநில நடனங்கள் ஆகியவற்றின் கலவையாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக மேடைகள், தரமான குடிநீர் வசதி, கழிப்பறைகளை ஆகியவை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.