சென்னை: ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களுடன், தொழிலாளர் நலத்துறை தரப்பில் நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகி உள்ளதாக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 1ந்தேதி அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம், 56ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வரும் 10-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, அரசிடம் நோட்டீஸ் வழங்கியது.
இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை, மின்வாரிய தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தன. அதன்படி, முதல்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 3-ம் தேதி நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து, 2வது கட்ட பேச்சு வார்த்தை (6ந்தேதி) தொழிலாளர் ஆணையரகத்தில் தொழிலாளர் நலதுணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படவில்லை. நேற்று நடந்தது. இதையடுத்து, அரசு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம் என தொழிலாளர் நலதுணை ஆணையரிடம் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதையும் அரசு ஏற்க மறுத்துவிட்டது. இதனால், 2வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவுற்றது.
இதையடுத்து, 3வது கட்ட பேச்சுவார்த்தை 9ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தின பேச்சுவார்த்தையின்போது, தொழிலாளர் சங்கங்கள், தங்களது ஆட்சேபனையை பதிவு செய்து கலந்து கொள்வது என்றும், பேச்சுவார்த்தையின் தன்மையைப் பொறுத்து 9-ம் தேதி மீண்டும் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூடி வேலைநிறுத்தம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.