சென்னை:  தேவையற்ற பொருட்களை போகி பண்டிகை அன்று எரிப்பதை தவிர்க்க வேண்டும் என  சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து வரும் 8 முதல் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கலாம் என்று மாநகராட்சி கூறியுள்ளது, சென்னை மாநகராட்சியில் 13,14ல் பழைய துணி, டயர், ரப்பர், டியூப், பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

போகி பண்டிகையின் போது சென்னையில் காற்று மாசைக் குறைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி புதிய முயற்சியைகையாண்டுள்ளது.

 பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வருகின்றனர்‘. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு வந்துள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால், நவீன காலங்களில் எரிக்கப்பொருட்கள் பெரும்பாலும்,  பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள் போன்றவற்றால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால்,  உருவாகும், புகை காரணமாக,  காற்று மாசு ஏற்படுவதோடு, அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் பொது மக்களுக்கு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் போகி அன்று தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும்,தேவையற்ற துணிமணிகளை குப்பை சேகரிப்போரிடம் வழங்குங்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்து,  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள கார்ட்டூன் காணொளியில் ஒரு கார்ட்டூன் பொம்மை ஒன்று தோன்றுகிறது. அந்த கார்ட்டூன் பொம்மை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுகிறது. அதில், ‘‘ஹைய்… நான் உங்க பவி அக்கா பேசுறேன்.. இந்த போகிக்கு நீங்க எரிக்க நினைக்கிற துணிகளை எல்லாம் உங்க வீட்டுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் வரும் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொடுக்கலாம். பை… பை…’’ என்று சொல்கிறது அந்த பொம்மை கார்ட்டூன்.

இந்த விழிப்புணர்பு பதிவு சென்னை மாநகராட்சி டிவிட்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில், குறிப்பாக சின்ன குழந்தைகள் மத்தியில் இந்த கார்ட்டூன் பதிவு வேகமாக சென்றடைந்துள்ளதால், போகி பண்டிகைக்கு வீணாக எரிக்கக்கூடிய துணிகளை எல்லாம் தூய்மை பணியாளர்களிடம் கொடுத்தால் இல்லாதவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதன் மூலம் காற்று மாசு தவிர்க்கப்படுவதோடு, தேவைப்படுவோருக்கு அந்த துணிகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.