சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததார். அவருக்கு மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி திருமகன் ஈவேரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,
 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு. திருமகன் ஈவெரா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தந்தை பெரியார் பாரம்பரியத்தில், சொல்லின் செல்வர் திரு. ஈ.வெ.கி. சம்பத் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோரின் அரசியல் பாதையைப் பின்பற்றி, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞராக காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். சமூக ஊடகத்துறையில் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் கருத்துகளை பரப்பியவர்.
46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் இராம சுகந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  சகோதரர் திருமகன் ஈவெரா இறப்பு செய்தி மிகவும் மன உலைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அண்ணாரின் குடும்பத்திற்கு ஆறுதலையும் சமாதானத்தையும் தரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.