டெல்லி: வெளியில் இருந்து உணவுப்பொருட்கள் கொண்டு வரக்கூடாது என கூற தியேட்டர்களுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்து உள்ளது.
திரையரங்குகளில் சாதாரண உணவுப்பொருட்களின் விலை பல மடங்கி உயர்த்தி விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி, தியேட்டருக்கு வருபவர்கள் தண்ணீர் உள்பட எந்தவொரு உணவுப்பொருட்களையும் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. இதனால், படம் பார்க்க செல்லும் பொதுமக்கள் அதிகவிலைக்கு ஸ்நாக்ஸ் மற்றும் உணவு பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.
இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம்,. மல்டிபிளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர், வெளியில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் கொண்டு வருவதை தடை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, திரையரங்க உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், தியேட்டர்களில், படம் பார்க்க வருவோர் வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை திரையரங்குகளுக்குள் கொண்டு செல்வதை தடுக்க திரையரங்க உரிமையாளர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் அதை தடை செய்யலாம். இருப்பினும், அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்களுக்கு சுகாதாரமான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இதுதொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்க தியேட்டர்களுக்கு முழு உரிமை உள்ளது எனறும், அதே வேளைய்ல், கைக்குழந்தை அல்லது குழந்தையை அழைத்து வருவோர் குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவை திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்லலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.