நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயகர் 1,00,008 (ஓரு லட்சத்து எட்டு) வடை மாலை அலங்காரத்துடன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்து ஆஞ்சநேயர் ஆசி பெற்று வருகின்றனர்.

மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அமாவாசை அன்று ஆஞ்சநேயர் அவதரித்தார். அவரது பிறந்தநாளான இனறு  ஆஞ்சநேயர் ஜெயந்தியாக  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நாமக்கல் ஆஞ்சநேயர், சுசீந்திரம் ஆஞ்சநேயர், பஞ்சவடி ஆஞ்சநேயர், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்பட பல கோவில்களில் இன்று விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  நாமக்கல் நகரில் மையப்பகுதியில் வீற்றிருக்கும் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, விசேஷ பூசைகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய தினம் ஆஞ்சநேயருக்கு வடைமாலை செலுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே வடை மாலை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து வடையை மாலையை கோர்க்கும் பணி நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது.

இதையடுத்து, இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு,  அதிகாலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை சாத்தி  அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், இந்த அலங்காரத்துடன் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாரைசாரையாக வருகை தந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் இந்த வடைமாலை  அலங்காரத்தில் காலை 10 மணி வரை  பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதைத் தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு, பின்னர் மஞ்சள், சந்தனம், பன்னீர், தயிர், பால்,தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இரவு 10 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயர் சுவாமியை தரிசித்து வருகின்றனர். மார்கழி மாதம் பனியினையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட வடை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயர் சன்னதி முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் 2ஆவது ஜெயந்தி விழா என்பது குறிப்பிடத்தக்கது.