காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 கிராமக்கள் இன்று ஆட்சியரை சந்திக்க பேரணி நடத்திய நிலையில்,  அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பேரணி வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, பரந்தூர் பகுதி கிராம மக்களிடம் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவத்து 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், கிராம உரிமை மீட்பு பேரணி என் பெயரில் பேரணி நடத்தி வருகின்றனர். அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க திட்டமிட்டு பேரணி நடத்தினர்.  பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியும் திட்டமிட்டபடி இன்று பேரணி நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டாட்சியர், காஞ்சிபுரம் எஸ்.பி. தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள்  உறுதி அளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து பரந்தூர் விமான நிலைய கிராம மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினருடன் நாளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, அன்பரசன் ஆகியோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை நடக்கிறது. இதில்  13 கிராம மக்களின் கோரிக்கைகள், இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதனால் பரந்தூர் விமான நிலையம் குறித்த முக்கிய முடிவுகள் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.