சென்னை: நாடாளுமன்ற அவைகளில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்று (12ந்தேதி) நடைபெற்ற டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது பற்றிய விவாதத்தின்போது, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஏ.ஆர்.ரெட்டி கேள்வி எழுப்பினார்.
அவர் அவையில், பேசும்போது, பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ரூபாய் மதிப்பு சரிந்து வருவதை குறிப்பிடுகையில் ரூபாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார் என்பதை சுட்டிக்காட்டினார்.
இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்ப்பு தெரிவித்து, உங்களது கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார். ஆனால், அதை ஏற்க மறுத்த ரெட்டி, சபாநாயகரை நோக்கி, ‘சார், நீங்கள் இதில் குறுக்கிடமுடியாது’ என கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் ஓம்பிர்லா, ‘சபாநாயகரிடம் இப்படிப் பேசக்கூடாது’ என கண்டித்தார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை நோக்கி, உங்கள் கட்சியினர் புரிந்துகொள்ளுமாறு சொல்லுங்கள் என அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து ரெட்டி அவரது கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அப்போது, நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் தான் இருந்தது. 5சதவீத பொருளாதார வளர்ச்சி தான் இருந்தது. இன்றைக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியிலும், உக்ரைன்-ரஷ்யா போருக்கு இடையேயும் இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. இது பெருமைக்குரிய விஷயம். ஆனால் இதை அவர்கள் வேடிக்கையாக்குகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது அவர்கள் பொறாமையால்தான் அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்த நிலையில், தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் (தனது சமூகப் பிரிவையும் குறிப்பிட்டு) என்பதால் தான் தனது இந்தி மொழி புலமை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில வார்த்தைகளை குறிப்பிட்டார் என ஏ.ஆர்.ரெட்டி குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் ஓம்பிர்லா, ‘மக்களவை உறுப்பினர்களை மக்கள் சாதியின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ தேர்ந்தெடுக்கவில்லை. யாரும் சபையில் இத்தகைய வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதை மீறி பேசினால் அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்’ என கடுமையாக எச்சரித்தார்.
இது சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.