டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். டெல்லியில் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று கூடி விவாதிக்கின்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி 6ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியின் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெயராம் ரமேஷ், மக்களவை காங்கிரஸ் தலைமை கொறடா சுரேஷ் ஆகியோர் பங்கேற்கிறார்கள் . முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம் , மனிஷ் திவாரி ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் பின்பற்ற வேண்டிய உக்திகள் குறித்து இதில் முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்று கொண்ட பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியினர் கடைபிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சோனியா காந்தி வீட்டில் ஆலோசனை நடைபெறுவது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கட்சிக்கு யார் தலைவர் என்பதே குழப்பமாக இருப்பதாகவும், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரு டம்மிதான் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன்முலம் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் ஒரு கண்துடைப்பு நாடகம் என அரசியல் விமர்சகங்கள் கூறி வருகின்றனர்.