குஜராத் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்றுடன் ஒயவிருக்கிறது.

மணிநகர் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட மொத்தம் 93 தொகுதிகளுக்கு வரும் திங்களன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அகமதாபாத் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மணிநகர் தொகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் குடியிருக்கிறார்கள். இங்குள்ள தமிழர்களிடம் தந்தி டி.வி. நடத்திய நேர்காணலில் பாஜக ஆட்சி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து குஜாரத்தில் உள்ள ஜவுளி மில்களில் வேலை செய்ய சென்ற இவர்கள் தலைமுறைகளைக் கடந்து அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஜவுளி மில்கள் இருந்த இடத்தில் தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மில் தொழில் நலிவடைந்துள்ளதாக கூறும் இவர்கள் கடந்த 25 ஆண்டு கால பாஜக ஆட்சியில் எந்தவித முன்னேற்றத்தையும் காணவில்லை என்று வேதனையுடன் விவரிக்கின்றனர்.

13 ஆண்டுகள் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றபின் பாஜக-வில் உட்கட்சி மோதல் எழுந்ததை அடுத்து கடந்த எட்டு ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள் மாறிவிட்டதாகவும்.

கடந்த ஓராண்டாக பாஜக-வில் குடுமிபிடி சண்டை நடந்து வருவதாக கூறியுள்ள இவர்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பிரிக்க மாநிலத்திற்கு தொடர்பில்லாத ஆம் ஆத்மி கட்சியை களமிறக்கி மும்முனை போட்டியை உருவாக்கி உள்ளது என்றும் இருந்தபோதும் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மக்கள் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.