சென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்தது, இந்த போட்யை  காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி  பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரியில் தொடங்க உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்க பிரபலமான அலங்கா நல்லூர், அவனிபுரம், பாலமேடு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஜல்லிக்கட்டு போட்டியாளர்கள் அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளது. அதன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மதுரை அலங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில், ‘பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இழைக்கப்படும் கொடூரம்’ என்றார்.

இதையடுத்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள்,    “ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் 15 மீட்டர் தூரம் மட்டுமே ஓட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. காளைகள் எப்படி 15 மீட்டர் தூரம் மட்டும் ஓட முடியும்? வீரர்கள் அனைவரும் காளையை தொட அனுமதி உள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற 15 சதுர மீட்டர் இடம் போதுமானதா? காளைகள் வெளியேற ஒதுக்கப்பட்ட 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன? 90 சதுர  மீட்டர் குறுகிய இடத்தில் காளைகளை ஓட விடாமல் வீரர்கள் தடுக்கிறார்களா? காளைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம், சென்று சேருடமிடம் தவிர ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா?” என பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

இதையடுத்து தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை  முன்வைத்தார். மேலும், ‘ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு பொழுதுபோக்கு போட்டி இல்லை. காலம் காலமாக நடத்தப்படும் ஒரு பாரம்பரியானமான விளையாட்டு.  இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் நாட்டு மாடுகளின் இனவிருத்தி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியிடும் ஈடுபடுத்தப்படும் நாட்டு காளைகள், 18 மாதம் முதல்  6வயதுக்குள் மட்டுமே இருக்கும். இந்த காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்படும். அதன் பின்னர் வயது முதிர்ந்த காளை மாடுகளை வீட்டில் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகள் வருமானம் ஈட்டும் விலங்குகள் அல்ல என்றதுடன் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, போட்டியில் பங்கு பெற சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதனை துன்புறுத்தல் என்று கூற முடியாது என்றும் விளக்கினார். நாய்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. அதை துன்புறுத்தலாக நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? இதற்காக நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவை தானே பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து,  ‘ஜல்லிக்கட்டில் காளை அவிழ்த்து விடப்படும்போது அதனை அடக்குவதாக பலர் காளை மீது பாய்கிறார்களே?’ என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பதில் அளித்த அரசு வழக்கறிஞர்,  ‘பலர் காளையை அடுக்குவதாக காளை மீது பாய்ந்தாலும் ஒருவர் காளையின் திமிலைப் பிடித்தவுடன் மற்றவர்கள் அந்த காளையை விட்டு விடுவார்கள். போட்டி நடக்கும்போது ஒருவர் மட்டுமே காளையைப் பிடிக்க வேண்டும் என்பது விதி. அதுகுறித்து போட்டியாளர்கள், தொடர்ச்சியாக மைக்கில் அறிவித்துக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை ஒரு காளையைப் பிடிக்க ஒருவருக்கு மேல் பலர் அந்த காளையின் மீது பாய்ந்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இந்த விதி போட்டியின்போது மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது’ என பதிலளித்தார்.

மேலும், அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே தமிழ்நாட்டில்  ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக  தெரிவித்ததுடன்,  ஜல்லிக்கட்டு வெறும் கேளிக்கை விளையாட்டு அல்ல என்று தெரிவித்த தமிழ்நாடு அரசு, அது தமிழர் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் இணைந்த ஒன்று என்றும், காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் குடும்ப உறவு வைத்துள்ளனர் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 என்று தெரிவித்த தமிழ்நாடு அரசு, அவை இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன என்றும், அவை நாட்டு மாடுகளின் இனத்தை பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்றன எனவும் தெரிவித்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வர வேண்டும் என்றும் நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்தது.