சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சோதனை அடிப்படையில் டிசம்பர் 5ந்தேதி  முதல் ஒரு மாதத்துக்கு திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதிஅளித்து உத்தரவிட்டு உள்ளது.  ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திறக்க அனுமதி வழங்கி உள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக, ஏற்பட்ட வன்முறையால், பள்ளி அடித்து நொறுக்கப்பட்டதுடன், பல கோடி மதிப்பிலான வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் கல்வித்துறையினர் பள்ளியை மூட உத்தரவிட்டதுடன், பள்ளி வளாகத்திற்குள் எவரும் நுழையக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால், பெற்றோர்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துவந்த நிலையில், பள்ளியைச் சீரமைத்து திறக்க அனுமதி அளிக்க உத்தரவிடும்படி பள்ளி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பள்ளிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழகஅரசு பள்ளி திறக்க அனுமதி வழங்க மறுத்து வந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது,  பள்ளிகளை எப்போதுதான் திறக்க அனுமதிப்பீர்கள் என தமிழகஅரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியதுடன், வரும் 25ந்தேதிக்குள் பள்ளி திறப்பு தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்யஉத்தரவிட்ட வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் ஒரு மாதம் சோதனை அடிப்படையில் பள்ளி நடைபெறட்டும், அதன்பிறகு முடிவு செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளது

பள்ளியில் உள்ள ஏ பிளாக்கின் மூன்றாவது தளத்தை சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதுடன்,  பள்ளிக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.