திருக்காமீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூரில் அமைந்தள்ளது.
ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார். அவரது தோஷம் நீங்க அருளிய சிவத்தலங்களுள் இதுவும் ஒன்று. பிரம்மனுக்கு பொன்னன் என்ற திருநாமமும் உண்டு. பொன்னன் எனக் கூறப்படும் பிரம்மன் வழிபட்டதன் காரணத்தால் இத்தலம் பொன்னன் ஊர் என்றிருந்து, மருவி பொன்னூரானது. பிரம்மன் வழிபட்ட காரணத்தினால் இத்தல இறைவனுக்கு பிரம்மேஸ்வரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதி சுந்தரமூர்த்தி சுவாமிகளால் வைப்புத்தலமாக போற்றப்பட்ட சிறப்புடையது. சுந்தரரும் பொன்னார் நாட்டுப் பொன்னார் என இப்பகுதியைப் போற்றுகின்றனர். பராசர முனிவர் இங்கு தவமிருந்து இத்தல பெருமானை பூஜித்து, பேறு பெற்றுள்ளார். சிவன் சன்னதியும் அம்பிகை சன்னதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டு அமைந்துள்ளதால் ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். இறைவன் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்பாள் சன்னதி தென்முகமாகவும் உள்ளது.
இறைவன் திருக்காமீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். பராசரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் போன்ற பெயர்களாலும் போற்றப்படுகின்றார். இறைவி சாந்தநாயகி. கோயில் வளாகத்தில் வடக்கே சுமார் 7 அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்றுள்ளது. இதுவே பெருமாள் கோயிலின் பழைய மூலவராகும். இவரது சிலை அத்தி மரத்தினால் மிகவும் கலை நயத்துடன் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்றதாகும். பெருமாளின் திருநாமம், அழகர் பெருமாள். ஸ்ரீகரண விண்ணகரப் பெருமாள் எனவும் போற்றப்படும் இவர், ஸ்ரீ தேவி –பூமிதேவியுடன் காட்சி தருகின்றார்.
இச்சிவாலயம் பல்லவர் காலத்தில் கட்டப்பெற்று, சோழர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சம்புவராய மன்னர்கள் கோயிலைச் சீரமைத்துள்ளனர். விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் சபா மண்டபம் கட்டப்பட்டு கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரே வளாகத்துள் மேற்கு நோக்கியவாறு பெருமாள் சன்னதியும், கிழக்கு நோக்கியவாறு சிவன் சன்னதியும் அமைந்திருப்பது சிறப்பு.
சிவனும், பெருமாளும் ஒரே தலத்தில் அருள்பாலிப்பதால் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.