பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான  என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பதாக  கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலம் மகளூருவில் கடந்த கடந்த 19-ந் தேதி நடைபெற்ற ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த பயங்கரவாதி ஷரீக் மற்றும் ஆட்டோ டிரைவர் காயமுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அதிர்ச்சிகரமனா தகவல்கள் வெளியாகி உள்ளது.  அந்த 2 பேரும் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 45 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ள பயங்கரவாதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கரவாத செயல் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில்,  மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து உபா சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு கோரி தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது. இதுகுறித்து கூறிய, காவல்துறை அமைச்சர்  அரக ஞானேந்திரா, மங்களூரு கங்கனாடி அருகே சமீபத்தில் குக்கர் குண்டு வெடித்தது. இதுகுறித்து கர்நாடக போலீசார் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்கள், ஆதாரங்கள், பிற விவரங்கள் அடிப்படையில் இந்த வழக்கை உபா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துமாறு என்.ஐ.ஏ.வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.

இவ்வாறு கூறினார்.