சென்னை: தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தமிழக பாஜக நிர்வாகி நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ளார் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது, பல்வேறு முறைகேடு கள் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இதை சுட்டிக்காட்டி, அவரை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்மீது பாஜகவினர் மின்சார வாரியம், டாஸ்மாக் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

சமீபத்தில், தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், தனது டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக  நிர்மல் குமார் விமர்சித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, தன்னை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று  நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு  நடைபெற்றது.

வழக்கின் விசாரணைக்கு, அமைச்சர்  செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். அவர்,  “அவதூறு பேச்சு குறித்து நிர்மல் குமாருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகும் மனுதாரர் மீண்டும் அவதூறாக பேசிவருகிறார்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு நிர்மல் குமார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்