சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதுபோல காஞ்சிபுரம்- செங்கல்பட்டு மாவட்டத்தில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நேற்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று மாலை கனமழை கொட்டியது. இதனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 6 ஆயிரத்து 702 மி.கன அடி தண்ணீர் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இன்று காலை நிலவரப்படி, 3300 மி.கன அடி கொள்ளவு கொண்ட புழல் ஏரிக்கு 967 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஏரியில் 2,536 மி.கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் 17.66 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,675 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 150 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 20.29 அடிக்கு தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 23 அடியை தொட்டதும் உபரி நீர் வெளியேற்றப்படும். தற்போது நீர்மட்டம் 21 அடியை நெருங்கி உள்ள தால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ரெட்டிஹில் அடுத்த சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மி.கன அடி. இதில் 194 மி.கன அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 66 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 797 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 53 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 70 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
அதுபோல, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம்-செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில், 40 ஏரிகள் 76 சதவீதமும், 122 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது. மீதமுள்ள 329 ஏரிகள் 25 சதவீத கொள்ளளவை எட்டி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பருவ மழையையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக காஞ்சிபுரம் மாவட்டம் 21 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வருவாய்த்துறை, மின்சாரம், காவல்துறை, தீயணைப்பு துறை என 11 துறையை சேர்ந்தவர்கள் அடங்கிய 21குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே பருவ மழை வரை தங்கி பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டு உள்ளார். ஏரிகளை பொதுப்பணித்து றையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.