திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டு இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். அவர் கோவில் நடையை திறந்து பூஜை செய்தார்.
ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. முன்னதாக, அடுத்த மண்டல காலம் முதல் ஒரு வருடத்திற்கான புதிய மேல் சாந்தியை தேர்வு செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. சபரிமலை மூலவர் கோயிலுக்குரிய மேல் சாந்தியையும், பவுர்ணமி வர்மா மாளிகை புரம் தேவி கோயிலுக்கான மேல் சாந்தியையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மேல்சாந்திஜெயராமன் நம்பூதிரி பூஜை செய்து கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று முதல் (18ம் தேதி) 22ம் தேதி வரை அய்யப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.
மேலும், மன்னர் சித்திரை திருநாள் பிறந்தநாளை முன்னிட்டு 24ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மண்டல கால பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி 5 மணிக்கு நடை திறக்கும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.