சென்னை:
ன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகிலேயே சமூக நீதி பேசியவர்கள் வள்ளுவரும், பெரியாரும்தான் என கூறினார்.

கனடாவில் சமூகநீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாடு நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள முடியாததால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கனடாவில் இந்த மாநாடு நடைபெறுவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். சமூகநீதிக்கான பன்னாட்டு மாநாடு 2017-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலும், 2-வது மாநாடு வாஷிங்டன்னிலும், 3-வது மாநாடு தற்போது கனடாவிலும் நடைபெறுவதை சுட்டிக்காட்டினார்.

செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் கொண்டாடியிருக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதால், உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகமில்லை என்றார். ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ் மரபு திங்கள் என அறவித்த கனடாவில் 3-வது மாநாடு நடைபெறுவது பெருமையாக இருப்பதாகவும் கூறினார்.

கனடாவில் நடைபெறும் மாநாட்டை நேரில் வந்து பார்க்க முடியாமலும், பல அறிஞர்களின் பேச்சை நேரில் கேட்க முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பணிகள் மற்றும் மக்கள் பணிகளால் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிடமுடியவில்லை என விளக்கமளித்தார். ஆனால், தமிழ் உணர்வால், சுயமரியாதை உணர்வால், மனிதநேய உணர்வால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளோம் என தெரிவித்தார்.

மனித நேயத்தின் அடிப்படையே சமூகநீதிதான், சமூக நீதியின் கருத்தியலே மனிதநேயம் என்ற அவர், உலகிலேயே சமூகநீதி பேசியவர்கள் வள்ளுவரும், தந்தை பெரியாரும்தான் என பெருமிதம் கூறினார். 1943-ம் ஆண்டிலேயே அரியவகை கருத்துக்களை பெரியார் எடுத்துரைத்துள்ளார். அதுபோல்தான் திராவிட மாடல் ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், தமிழ்தாய் வாழ்த்து மாநிலபாடலாக அறிவித்தது, இல்லம் தேடி மருத்துவ திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டும் இல்லாமல் சமூக வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் கொள்கைகளை தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த மற்ற மற்ற மாநிலங்கள் துடிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.