சென்னை: மதுரையில் அமைந்துள்ள  உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகத்துக்கு தேவையான நிதி ஒதுக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு, மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகத்துக்கு ரூ. 114 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின்போது, மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் துணை இயக்குனர்,  மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகம் அமைக்க இதுவரை தமிழகஅரசு எந்தவொரு நிதியும் ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சராக மறைந்த எம்.ஜி.ஆர் இருந்தபோது, கடந்த 1981ம் ஆண்டு மதுரையில் 5வது உலகத்தமிழ் மாநாட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய எம்ஜிஆர், “உலகத் தமிழர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின்கீழ் செயல்படும் வகையில் உலகத்தமிழ்ச் சங்கம் இயங்கும் என்றும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும்  அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு உலகத் தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்டு அரசு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதில் நூலகமும் இடம்பெற்றுள்ளது. அங்கு பல அரிய நூல்களும், ஆய்வு நூல்களும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த  உலக தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடக் கோரி மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர்  பொதுநல வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில்,  “மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் திறக்கப்பட்டு 4 ஆண்டுக்கு மேலாகியும் தமிழ் மொழி வளர்ப்புக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. நூலகத்தில் தரமான நூல்கள் இல்லை. உலக தமிழ்ச் சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை தமிழ்ச்சங்கத்தின் துணை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம்அளித்தார். அப்போது,  புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக மதுரை உலக தமிழ்சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ் சங்கத்தில் 26 ஆயிரத்து 35 நூல்கள் உள்ளன. பதிப்பிக்கும் நூலின் ஒரு நகலை, உலக தமிழ் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்தகை நூல்களும் பெறப்பட்டுள்ளன.

2017- 18 ல் நூலகத்தை அமைப்பதற்காக 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. கடந்த 2018 பிப்ரவரி 5ஆம் தேதி அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புத்தகங்களை வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில், அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்களை கணக்கிட்டால் அது, கணக்கீடு செய்யாத அளவில் இருக்கும் என கூறியதுடன்,  மனுதாரர் தரப்பில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய  அறிவுறுத்தி வழக்கை 1 மாதத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில்தான் இதுபோன்ற நற்செயல்களுக்கு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ்மீதுஅக்கறை கண்ட திமுக ஆட்சிக்கு வந்த பிறகாவது, அதற்கான நிதியை விடுவித்திருக்கலாமே என தமிழ் ஆர்வலர்கள்  எழுப்பி உள்ளனர்.

ஆட்சிக்கு வந்த உடனேயே மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என அறிவித்து அதற்காக ரூ.114 கோடி ரூபாயை அள்ளி வீசிய முதலமைச்சர் ஸ்டாலின், உலக தமிழ்ச் சங்கத்தில் நூலகதிற்கு தேவையான நூல்களை வாங்க நிதி ஒதுக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்திற்கு அடையாளமாக திகழும் உலக தமிழ்சங்க நூலகத்துக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வழங்க வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.