சென்னை: மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலு.  இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  மக்கள் சேவை ஆற்றியவர்.  வயது முதிர்வு காரணமாக டத்தோ சாமிவேலு இன்று அதிகாலை காலமானார். இவர்  மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக பதவி வகித்தவர்.  அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,  “மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.