சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளான செப்டம்பர் 11ந்தேதி “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நமது தாய்மொழியான தமிழ் மொழி மீது மிகவும் பற்று கொண்ட பாரதியார், சுதந்திர போராட்ட தியாகி மட்டுமின்றி, பெண்கள் உரிமை மற்றும் சமூக சீர்திருத்தவாதி. இவர் எழுதிய பாடல்களின் மூலமாக பிரபலமானவர் மகாகவி பாரதியார். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று பெண்ணுரிமைக்காக பாடியர். இது மட்டுமின்றி “சாதிகள் இல்லையடி பாப்பா; குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;” என்று தீண்டாமை ஒழிப்பு குறித்து முதன்முதலில் பாடியவரும் பாரதியார்தான். அவரது நினைவு நாளான செப்டம்பர் 11ம் தேதி “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாளை காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று. தெய்வப்பற்று. தேசப்பற்று. மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல், சமூக. பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்துள்ளார். மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும்.
பேரறிஞர் அண்ணா அவர்களளால், “மக்கள் கவி” என்று அழைக்கப்பட்டார் மகாகவி பாரதியார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சிக் காலத்தில் எட்டையபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் நாட்டுடைமையாக்கி, நினைவில்லமாக மாற்றினார். 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாரதியாரின் நினைவைப் போற்றுகின்ற வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அவற்றில், பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11, “மகாகவி நாள்”-ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும். எனவே, நாளை “மகாகவி நாள்” கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.