டெல்லி: அமெரிக்காவில் படிக்க இந்திய மாணவர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை 82ஆயிரம் மாணாக்கர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்து உள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகம் என்பதுடன், கடந்த ஆண்டை விட சுமார் 20ஆயிரம் விசாக்கள் கூடுதல் என்றும் தெரிவித்து உள்ளது.

இதுதொடல்பாக டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக பொறுப்பாளர் பாட்ரிசியா லசினா  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய  மாணவர்கள் சரியான நேரத்தில் தங்கள் படிப்புத் திட்டங்களுக்குச் செல்வதை உறுதி செய்வதற்காக மாணவர் விசா விண்ணப்பங்களைச் செயலாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள  அமெரிக்க தூதரகத்தின் சாதனையை அமெரிக்க அரசாங்கம் பாராட்டி உள்ளதாகவும்,  “ கடந்த ஆண்டுகளில் கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, பல மாணவர்கள் விசாவைப் பெற்று தங்கள் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்து உள்ளது.

இந்த கோடையில் மட்டும் 82,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளது என்றும், இது முந்தைய ஆண்டை விட அதிகம். பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் உயர்கல்விக்காக அதிகம் விரும்பப்படும் நாடாக அமெரிக்கா தொடர்ந்து உள்ளது என்பதை இது காட்டுகிறது என்று  தெரிவித்துள்ளார்.

மேலும, அமெரிக்காவில் படிக்கும் அனைத்து சர்வதேச மாணவர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் இந்திய மாணவர்கள் உள்ளனர், 2020-2021 கல்வியாண்டில் இந்தியாவில் இருந்து 1,67,582 மாணவர்கள் இருப்பதாக 2021 இல் அறிக்கை காட்டுகிறது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.