சென்னை: சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தனி கவுண்டர்கள் மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் திறக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இருந்தாலும் அரையாண்டுக்கான சொத்துவரி செலுத்த இந்த மாதம் (செப்டம்பர்) கடைசி என்பதால், சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து வரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் திறக்கப்பட்டு உள்ளதா தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், சந்தேகம் இருப்பின் அங்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், மாநகராட்சி மன்றத் தீர்மானத்தின் அடிப்படையில், 2022-23-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு சொத்துவரி பொது சீராய்வானது மேற்கொள்ளப்பட்டது. சொத்துவரி பொது சீராய்வு அறிவிப்புகள் தபால்துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் 11 லட்சத்து 58 ஆயிரத்து 79 சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இதுவரை சொத்து உரிமையாளர்கள் 5.75 லட்சம் பேர் ரூ.472.88 கோடி சொத்துவரியை செலுத்தியுள்ளனர். சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட வரியை கணக்கீட்டு அறிய ஏதுவாக, ஏற்கனவே மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/revisionNoticeOne!generateReport.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதில் சொத்துவரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் முதலிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தினை அறிந்து கொள்ளலாம். தற்போது, சொத்துவரி பொது சீராய்வின்படி, குறிப்பிட்ட தெருவுக்கு சதுரடி அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி விவரம் அறிவதற்கு மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/citizenCalc.action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரி விவரத்தை அறிந்து கொள்ளலாம். மேலும், சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பாக எழும் சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம் குறித்து தெளிவு பெறுவதற்கு மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி தொடர்பான, சந்தேகங்கள், கணக்கீட்டு விவரம் ஆகியவை குறித்து தெளிவு பெற, மாநகராட்சியின் மண்டலங்களில் அமைந்துள்ள கவுண்ட்டர்களில் பணியாற்றும் பணியாளர்களிடம் நேரில் சென்று, தங்களது சொத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரி குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சி இணையதளம், செல்போன் செயலி மூலமாக சொத்துவரி செலுத்தும்போது ஏதேனும் குறைபாடுகள் ஏற்படின் வரி செலுத்துவோர் மாநகராட்சியின் ‘1913’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். அதனடிப்படையில் தீர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை வருகிற 30-ந்தேதிக்குள் செலுத்தி, வட்டி விதிப்பை தவிர்க்குமாறும், மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.