சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜூன் 11ந்தேதி நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார். மேலும், ஜூன் 23ஆம் தேதியன்று இருந்த நிலையே தொடர வேண்டுமென தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.  இதை எதிர்த்து எடப்பாடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  அவரது  மனுவில், பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதனிடையே எடப்பாடி பழனிச்சாமியின் மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனுவை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்.  மேல்முறையீட்டு வழக்கு தனது தரப்பு வாதங்களை கேட்ட பிறகு எந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம் வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில்  தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு கிடைக்காத காரணத்தால் வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை 25ந்தேதி (இன்றை தினம்)  ஒத்திவைத்தார்.

இதையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று நடைபெறவுள்ள விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பிற்கு  வாதம் செய்ய ஒரு மணி நேரம் நீதிபதி அவகாசம்  வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இன்றைய வாதம்  இறுதி வாதமாக அமையலாம் என இரு தரப்பும் தீவிரமாக ஆலோசித்த வருகிறது.