சென்னை: ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
தமிழ்நாட்டின் ஆன்லைன் ரம்மிக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆன்லைன் ரம்மி எனப்படும் ஹைடெக் சூதாட்டத்தால் பலர் கடன் வாங்கி விளையாடி அதன் மூலம் கடனாளியாகி அதை அடைக்க முடியாமல் அவதியடைகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 30பேர் வரை தற்கொலை செய்துள்ளனர். இதனால், ஆன்லைன் ரம்மக்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. சந்துரு தலைமையிலான குழு 701 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக முதல்வரிடம் கடந்த மாதம் 27ஆம் தேதி தாக்கல் செய்தது. அக்குழுவின் அறிக்கை அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இதைடுத்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்த திமுக அரசு, இ ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய முடிவுகளை எடுப்பார் என தெரிகிறது.