சென்னை; 4,308 மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பரில் நிறைவு பெறும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும் 7ந்தேதி (ஞாயிறு) மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயனர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கினார். தொடர்ந்து, போதை மாத்திரை பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்டெடுக்கும் ஒப்பியாய்டு மாற்று சிகிச்சை மையத்தையும் திறந்து வைத்தார்
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் விதமாக சென்னையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமலேயே காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இன்று 520 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தை தரம் உயர்த்த 40 கோடி செலவில் கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஒப்பியாயிட் மாற்று சிகிச்சை திட்டம் இன்று கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்றவர், 1794-ம் ஆண்டு முதல் 228 ஆண்டுகளாக மன நோயாளிகளுக்கு புகலிடமாக தொடங்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதுபோல் தமிழ்நாட்டில் 43 இடங்களில் அரசு மனநல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “மருத்துவர்கள் உள்ளிட்ட 4308 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்தும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.