முகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கிய படை வீடுகளான திருச்செந்தூர் மற்றும் பழனி ஆகிய கோயில்களில் காசு வாங்கிக்கொண்டு விரைவாக சாமி தரிசனத்துக்கு அழைத்து செல்வது என்பது அதிகரித்து வருவதாக தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது.
இயற்கை எழில் சூழ்ந்த திருச்செந்தூர் முருகன் கோயிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் முருகனின் அருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாத சிலரை 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செல்லும் சிறப்பு வழியில் அர்ச்சகர்கள் அழைத்து சென்றுள்ளனர்.
காசு வாங்கிக்கொண்டு ஒரு சிலரை இவ்வாறு குறுக்குவழியில் அர்ச்சகர்கள் அழைத்து செல்வதாக அங்கு கூடியிருந்த பக்தர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தியதோடு இதனை எதிர்த்து குரல் கொடுத்ததை அடுத்து அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த சிறப்புக் காவலர்கள் இதுகுறித்து முறைகேட்டில் ஈடுபட்ட அர்ச்சகர்களை தட்டிக்கேட்டுள்ளனர்.
அதற்கு கோயிலில் இருந்த அர்ச்சகர்கள் அனைவரும் ஒன்று கூடி சூழ்ந்துகொண்டு அந்த காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை அங்கு பணிசெய்யவிடாமல் தள்ளிவிட்டு தள்ளுமுள்ளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சர்ச்சையில் தொடர்புடைய காவல்துறை மற்றும் அர்ச்சகர்கள் இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால் இவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமரசம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை வீடியோ எடுத்து சிலர் அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.