சென்னை; மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன் துவக்கி வைத்தார்.அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை உறுதி செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்றவர், சென்னையில் சைதாப்பேட்டை மண்டலத்தில் 15 ஆரம்ப சுகாதார மையங்களில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. எனவே, அதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. வெளிநாட்டில் இருந்து வருவோரிடம் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.