டில்லி

பாஜக செய்தி தொடர்பாளர் சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர் பாளர் பிரேம் சுக்லா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. மக்களிடையே இது கடும் வெறுப்பை உண்டாக்கி உள்ளது.  பல மட்டத்திலும் பாஜக மீது எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

இந்நிலையில்  காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில்

”காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பிரேம் சுக்லா, அவதூறான கருத்துகளைக் கூறியுள்ளார்.  இது போல அநாகரீக செயலில் தொடர்ந்து பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   நமது புராணங்கள் பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கற்றுத் தந்துள்ளன.

இருப்பினும் பாஜக தலைவர்கள் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு நாட்டின் பெண்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  இதன் மூலம் பாஜகவின் பெண்கள் எதிர்ப்பு முகம் அம்பலமாகி உள்ளது.  எனவே இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நட்டா மன்னிப்பு கோர வேண்டும்”.

எனத் தெரிவித்துள்ளார்.