டில்லி
இன்று நாட்டின் 15 ஆம் குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்க உள்ளார்.
திரவுபதி முர்மு ஒடிசா மாநிலத்தில் உள்ள உபுர்பேடா என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் கவுன்சிலராக வாழ்க்கையைத் தொடங்கி எம்எல்ஏ, அமைச்சர், ஆளுநர் எனப் படிப்படியாக உயர்ந்து நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்கவுள்ளார்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் 64 சதவீத வாக்குகளைப் பெற்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வீழ்த்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு நாடு விடுதலை அடைந்த பின் பிறந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
இன்று காலை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்கவுள்ள முர்மு, காலை 9.17 மணிக்கு நாடாளுமன்றத்தில் வடக்கு முற்றத்திற்கு வருகை தருவார். ஓய்வு பெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை வரவேற்பார். பிறகு காவேரி அறைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்படுவர்.
இன்று காலை 9.42 மணி அளவில், காவேரி அறையில் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத்தும் அப்பதவியை ஏற்கவிருக்கும் முர்முவும் தர்பார் ஹாலுக்கு சென்று சரியாக 9.49 மணி அளவில் சல்யூட் மரியாதையை குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் அளிக்க அதை ராம்நாத் கோவிந்த் ஏற்பார்.
பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ராம்நாத் அதன்கோவிந்தும், திரவுபதி முர்முவும் அமர்ந்த பிறகு நடைபெறும் நிகழ்ச்சியில் திரவுபதி முர்முவுக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.