திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறுஎன்ற ஊரில் அமைந்தள்ளது.
நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை.
ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். அப்போது சனி அவனை விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் “சனீஸ்வரன்” என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.
சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.
சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். எனவே, கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள்