கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சக்தி உறைவிடப்பள்ளி  மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த மாணவியின் உடல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி மறுபரிசோதனை செய்த நிலையில், உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க பெற்றோர் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் 16 வயதான ஸ்ரீமதி என்ற இளம்பெண், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி  மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில்,  கடந்த 13-ம் தேதி பள்ளியின் விடுதிக் கட்டிட மாடியிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்த மர்ம மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும், , தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 3 நாளாக அவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், காவல்துறை சரியான முறையில் நடைவடிக்கை எடுக்காததால், கடந்த 14ந்தேதி பெரும் கலவரம் வெடித்து, பள்ளி சூறையாடப்பட்டது. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய கலவரத்தை காவல்துறையினர் கட்டுபடுத்தினர்.

இதற்கிடையில், சென்னை நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், மறு பிரேதப் பரிசோதனையில் பங்கேற்க மாட்டோம், மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி விசாரணைக் குழு முன்னிலையில், தமிழக அரசின் சிறப்பு மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மறு பிரேதப் பரிசோதனையை முடித்தனர்.

அதைத்தொடர்ந்து, மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு, கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் விஜயபிரபாகரன்  மாணவியின் வீட்டில் தகவல் அளிக்கச் சென்றார். அப்போதும், உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறு பிரேதப் பரிசோனை செய்யப்பட்ட விவரத்தை, அங்கு நோட்டீஸாக ஒட்டினர்.

நேற்று வரை மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் முன்வரவில்லை. மாணவியின் உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு, மாவட்ட காவல் துறையினர் பெற்றோரிடம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் தரப்பு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்த மாணவியின் உடலை பெற்றுக்கொள்வது குறித்து பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில்,  செய்தியாளர்களிடம் பேசிய கள்ளக்குறிச்சியில்  புதிதாகப் பொறுப்பேறற காவல் கண்காணிப்பாளர் பகவலன் ,  ‘பெற்றோருக்கு மகள் மரணம் தொடர்பாக மனக்குறை இருக்கும். அந்த இழப்பை ஈடுகட்ட முடியாது. எனினும், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து பெற்றோரிடம் பேசி‌ வருகிறோம். மாணவியின் உடலை நல்லடக்கம் செய்யும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.