சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக, இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதும், அதைத்தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைப்பது குறித்து, காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
முன்னதாக அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற மோதலை ஓபிஎஸ் வேனில் இருந்து ரசித்ததாகவும், காவல்துறையினர் கண்டு கொள்ளவில்லை என்றும் அங்கிருந்த ஊடகத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வானகரத்தில் பொதுக்குழு கூடியது. அதே வேளையில் பொதுக்குழுவில் ஓபிஎஸ் கலந்துகொள்ளாமல், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். முன்னதாக அங்கு ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு பூட்டு போடுமாறு தலைமை கழக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அலவலகத்தை மூடி, பூட்டு போட்டனர்.
இந்த நிலையில், அங்கு தனது ஆதரவாளர்கள் புடைசூழ காலை 8 மணிஅளவில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும், அவரது ஆதரவாளர்களான வைத்தி லிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட தொண்டர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார். அவரது வாகனத்துடன், ஆதரவாளர்களின் ஏராளமான வாகனங்களும் ராயப்பேட்டை வந்தது.
இதையறிந்த எடப்பாடி ஆதரவாளர்கள், தலைமை அலுவலகத்துக்கு முன்பு கூடினார். சென்னை மாவட்ட செயலாளரான ஆதிராஜாராம் ஏராளமான அதிமுக தொண்டர்களைநிறுத்தி இருந்தார். இவர்களை பார்த்ததும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர்கள்மீது தாக்குதல் நடத்தினார். இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. ரத்தம் சொட்ட சொட்ட அவர் பரிதாபமாக நின்றார். இரு தரப்பினரும் சரமாரியாக அடித்துக்கொண்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆட்கள் கொடி கம்பத்தை திருப்பி பிடித்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்களை அடித்து துவம்சம் செய்தனர். இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கத்தொடங்கினார்கள். செருப்புகளையும் வீசி எறிந்தனர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. அங்கு நின்றிருந்த ஒரு கார் அடித்து நொறுக்கப்பட்டது.
இதையடுத்து, பூட்டுப்போடப்பட்டி கட்சியின் அலுவலகத்தை இரும்பு தடியால் உடைத்தனர். கதவை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த எடப்பாடி பழனிசாமியின் படத்தை தூக்கி வெளியே வீசினார்கள். அங்கு பேனரில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் படத்தை கிழித்து எறிந்தனர். இந்த கபளீகரம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டிருந்தார். அப்போது, சிலர் தலைமை கழக வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியின் படத்தை தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து அங்கிருந்த கட்சியின் ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு மோதல் நடந்துகொண்டிருக்கும்போது, அங்கு வேனில் அமர்ந்த ஓபிஎஸ், அதை தடுக்க முன்வராமல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அதே வேளையில் அங்கு போதுமான அளவு காவல்துறை யினரும் இல்லை. நீலமை சீரியசான நிலையில், கடைசி நேரத்தில் அதிரடிப்படை காவல்துறையினர் வந்து, தடியடி நடத்தி, இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். ஆரம்பத்திலே போதுமான காவல்துறையினர் இருந்திருந்தால் தேவையற்ற மோதலை தவிர்த்திருக்கலாம்.
அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போதுதான் பயங்கர சம்பவங்கள் அரங்கேறி இருப்பது அ.தி.மு.க. தொண்டர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எடப்பாடி தரப்பு ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அத்துமீறி அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது
இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கலாமா என தமிழகஅரசு யோசித்து வருவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், வருவாய்த்துறையினல், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர்.