சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் ரூ.30கோடி செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
தமிழ்நாடுசெய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அந்த தொகுதி எம்எல்ஏ எழிலன் மற்றும் அதிகாரிகள் இன்று வள்ளுவர்கோட்டம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிறகு சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. சமீபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதலமைச்சர் ஸ்டாலின் வந்தபொழுது வள்ளுவர் கோட்டம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.
இதையடுத்து இன்று வந்து ஆய்வு செய்ததாக கூறியவர், வள்ளுவர் கோட்டம் ரூ. 30 கோடி செலவில் சீரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுப் பணித் துறை சார்பில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
அத்துடன், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் சீரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உலக செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.