சென்னை: சென்னையில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தலைமைச்செயலக ஊழியர்கள் அனைவரும் நாளை முதல் முக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுத்துறை துணைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவின் 3அலைகள் பரவி முடிந்த நிலையில், 4வது அலை பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா 4வது அலை ஜூன் 22ந்தேதி வர வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே கான்பூர் ஐடிஐ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கேற்றால்போல இந்தியா முழுவதும் தொற்று பரவல் மெல்ல மெல்ல மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 12ஆயிரத்தை கடந்த நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகரித்து வருகிறது. சென்னையில் 112 தெருக்களில் கொரோனா தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, சில மாவட்டங்களில் முக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் முக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தலைமைச்செயலகத்திலும் நாளை முதல் முக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, பொதுத்துறை துணைச்செயலாளர் எஸ்.அனு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் புதிய வகையான கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளபடியாலும், சில மாவட்டங்களில் இதன் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்பதாலும், அனைத்து அலுவலர்களும் 24.06.2022 முதல் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து அலுவலகத்திற்கு வருமாறும், சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.