சென்னை: பரபரப்பன ஒற்றை தலைமை மோதலுக்கு இடையில் நாளை அதிமுக பொதுக்குழு கூட உள்ளது. இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள தீர்மானங்கள், கட்சியின் வரவுசெலவு கணக்குகள் ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நாளை அதிமுக பொதுக்குழு,செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்காக உருவாக்கப்பட்ட விதிமுறைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக,எம்ஜிஆர், ஜெயலலிதா பின்பற்றிய விதிமுறைகளை பின்பற்றி நாளை ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னென்ன என்பது குறித்து, ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், இந்த தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓபிஎஸ்ஸிடம் அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக அதிமுக வரவு, செலவு கணக்கு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஒற்றை தலைமை குறித்து இபிஎஸ் தரப்பில், சிறப்பு தீர்மானம் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.