ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன்குடி கைலாசநாதர் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மங்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது.

மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தை தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது ஆட்சியை ஆரம்பித்தாள். இதன்பிறகு தனது சூலத்தில் படிந்திருந்த ரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு “பாப விமோசன தீர்த்தம்’ என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோவிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோவிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.

இக்கோவில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோவில் இது. இங்கு பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது.

இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.

அந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் “தண்டை’ என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இங்கு யோகசரஸ்வதி சிலையும் உள்ளது. சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதற்குபதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர்.