பணமோசடி வழக்கு மற்றும் ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மே மாதம் 30 ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 2.82 கோடி ரூபாய் பணம் மற்றும் 1.8 கிலோ தங்கம் உள்ளிட்ட 4.81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர், ஜூன் 13 ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சத்யேந்திர ஜெயின் தொடர்ந்த ஜாமீன் மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது கொரோனா பாதிப்பு காரணமாக தனக்கு நினைவிழந்து
விட்டதாகவும் ஹவாலா தொடர்பான ஆவணங்கள் குறித்து தனக்கு நினைவில்லை என்று கூறியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

மேலும், சத்யேந்திர ஜெயின் அளிக்கும் வாக்குமூலத்தை வேறுயாரும் எழுதக்கூடாது என்றும் தன் கைப்பட எழுதி தருகிறேன் என்றும் கூறுவதோடு ஒரு பக்கம் எழுதுவதற்கு பலமணி நேரங்கள் எடுத்துக் கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணமோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயின் சாமானிய ஆள் இல்லை என்று கூறியிருக்கும் அவர்கள் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை மீண்டும் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.