திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் அமைச்சர் ஜலீலுக்கு எதிராக நீதிமன்றத்தில் கூறிய ரகசிய வாக்குமூலத்தை வெளியிடுவேன் என அறிவித்துள்ள தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ், தன்மீதான முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவை கலங்கடித்து வரும் தங்கக்கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜய் மற்றும் அவரது குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும், அமைச்சர் ஜலீலுக்கும் தொடர்பு உள்ளதாகவும், சமீபத்தில் தங்கக்கடத்தல் வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ள ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு தகவலை வெளிட்டார். இதையடுத்து, அவருக்கு மிரட்டல் வந்தது. அது தொடர்பான ஆடியோவையும் வெளியிட்டார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார், மகிளா காங்கிரசார், பாஜ, முஸ்லிம் லீக் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் அளித்த பேட்டியில், அஎன் மீது எந்த காரணமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜலீல் சதித்திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நான் கொடுத்த ரகசிய வாக்கு மூலத்தில் கூறிய விவரங்களை விரைவில் வெளியிட தீர்மானித்து உள்ளேன். ஜலீல் என்னென்ன குற்றங்கள் செய்தாரோ அவை அனைத்தையும் வெளியிடுவேன். என்னிடம் சமரசம் செய்வதற்காக அவர்தான் ஆட்களை அனுப்பி வைத்தார். என் மீது இனியும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப் போகிறார்கள் என்பதை பார்த்து விடலாம்.
என் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனக்கு போலீசின் பாதுகாப்பு தேவையில்லை. உடனடியாக அவர்களை வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, தன்மீதான முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.