ஸ்ரீநகர்

பயங்கர வாத தாக்குதல்கள் தொடர்வதால் காஷ்மீர் மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கிய மதத்தினரைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.  மேலும் காஷ்மீரில் உள்ள வெளிமாநிலத்தவர்களைக் குறி வைத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

குல்காம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்திற்குள் கடந்த 31-ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள் அங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த ராஜ்னி பாலா(36) என்ற பெண்ணை சுட்டுக்கொன்றனர். கடந்த 26-ம் தேதி பட்காம் மாவட்டத்தில் டிவி நடிகையான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அம்ரீன் பட் என்ற பெண் தனது வீட்டிலேயே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தவிர 25-ம் தேதி பாரமுல்லாவில் உள்ள மதுபானக்கடையில் பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த ரஞ்சித் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்தார்.  பட்காம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த இந்து மதத்தைச் சேர்ந்த ராகுல்பட் கடந்த 13-ம் தேதி அலுவலகத்திற்குள் உள்ளேயே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காஷ்மீரில் பட்கம் மாவட்டம் மஹ்ரய்புரா பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் பணியாற்றி வருகின்றனர்.   நேற்று இரவு 9 மணி அளவில் அந்த செங்கல் சூளைக்குள் துப்பாக்கியுடன் சென்ற பயங்கரவாதிகள் அங்கு வேலை செய்துகொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் பீகாரைச் சேர்ந்த தில்குஷ் குமார் என்ற 17 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் பஞ்சாபைச் சேர்ந்த ராஜன் என்ற மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த தாக்குதல் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.  காஷ்மீர் மக்கள் இந்த தொடர் தீவிரவாத தாக்குதலால் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.