சென்னை: உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசென்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணற் சிற்பத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
இதையொட்டி, சென்னை பெசென்ட் நகர் கடற்கரையில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பாக உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணற்சிற்பத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை நொடர்ந்து புகையிலை பழக்கத்தில் வெளிவருவதற்கான QuitTobacco என்ற செயலியையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், 1987 ஆம் ஆண்டு மே 31 முதல் புகையிலை ஒழிப்பு தினம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் உலக நாடுகள் செய்து வருகின்றன. புகையிலை பழக்கத்தில் இருந்து மீண்டு வர Quit Tobacco என்ற செயலியும் இன்று தொடங்கப் பட்டுள்ளது என கூறினார். அடையார் புற்றுநோய் மருத்துவமனை புகையிலை ஒழிப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து பல்வேறு வகையில் ஆண்டு தோறும் மேற்கொண்டு வருகிறது என்றும் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வலர்கள் இதுபோன்று மேற்கொள்ளும் முயற்சி பெரிதளவில் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகியவர்களை வெளிவர ஊக்குவிக்கும் என்றார்.
மேலும், புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செங்காந்தள் விளையாட்டு கழகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, செங்காந்தள் விளையாட்டு கழகம் சார்பாக சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சிறுவர்கள் அமைச்சர் முன்னிலையில் சிலம்பம் விளையாடி, அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.