சென்னை:  அமைச்சர் பொறுப்பு குறித்து திமுக இளைஞர் அணி தலைவரும், முதல்வரின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளர். அதில், கட்சி தலைமைக்கு தர்மசங்கடம் தர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என அவரது நண்பரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், உதயநிதி ஆதரவாளர்களும் கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் அன்பில் மகேஸ் தலைமையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென தொண்டர்களுக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி,திண்டுக்கல்,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டங்களில் எனக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு தலைமைக் கழகத்திற்கு அனுப்பிவைத்திருப்பது குறித்து அறிந்தேன்.என் தொடர் பணிகள் மீதும்,முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும்,அன்பிற்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.

கழகம் வழங்கிய வாய்ப்பில்,சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளுக்கான மக்கள் பணியையும்,கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் கழக இளைஞர் அணியின் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்து,கழகப் பணியையும் என்னால் இயன்றவரைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன்.

இந்தச் சூழலில்,என்மீதுள்ள அன்பின் காரணமாக,’எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.

எனவே,பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அவர்களின் வழியில் வந்த நம் கழகத் தலைவர் அவர்கள் வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம், மக்கள் பணியாற்றிடுவோம்,கழகத்துக்கும் கழக அரசுக்கும் மகத்தான புகழைச் சேர்த்திடுவோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.