சேலம்
வரும் மே மாதம் 26 ஆம் தேதி முதல் ஏற்காட்டில் ஒரு வாரத்துக்குக் கோடை விழா நடைபெற உள்ளது.
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏற்காடு முக்கிய சுற்றுலா தலமாகும். இங்கு ஆண்டு தோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். இதைக் காணத் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாகக் கோடை விழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த வருடம் நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் கோடை விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த விழாவுக்காக மலர்ச் செடிகள் நடப்பட்டு தற்போது அவை பூத்து குலுங்குகின்றன.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வரும் 26 ஆம் தேதி தொடங்கும் கோடை விழா ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் 5 லட்சம் அரிய மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சி மற்றும் அரிய வகை மாம்பழ கண்காட்சி நடைபெறுகிறது.
அரசு போக்குவரத்துக் கழகம் சேலத்தில் இருந்து ஏராளமான சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது. தவிர ஏற்காட்டின் உள்ளே முக்கிய இடங்களைப் பயணிகள் காணவும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நெரிசலைத் தவிர்க்க மலைக்குச் செல்லும் வழி மற்றும் இறங்கும் வழி என இரு பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
கோடை விழாவில் தமிழக அரசு சார்பில் கண்காட்சி ஒன்று நடைபெறுகிறது. தவிர தினசரி கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப்போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கடந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், கோடை விழா தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஏற்காடு வர்த்தகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ,