சென்னை:
தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று முல்லை பெரியார் அணையில் ஆய்வு நடத்த உள்ளனர்.

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பெரியாறு அணையைக் கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் நாதன் தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

தற்போது இந்தக் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத் தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார். தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கேரள மாநிலம் சார்பில், அம்மாநில நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ஜோஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க வேண்டும் என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, கண்காணிப்புக் குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது.

இதையடுத்து தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியம், கேரளா சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீசும் சேர்க்கப்பட்டனர்.

தொழில்நுட்பக் குழுவினர் சேர்க்கப்பட்ட பிறகு முதல்முறையாக இந்தக் கண்காணிப்பு குழு இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளது.

தமிழகம் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் சுப்பிரமணியம் கேரளா சார்பில் மாநில நீர்ப்பாசனத்துறை நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோரும் ஆய்வு செய்ய உள்ளனர்.