சென்னை: முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் என கூறியதற்க எதிராக, திமுக சார்பில் மத்தியஅமைச்சர் எல்.முருகன் மீது  அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து எல்.முருகனுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியஇணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன், தமிழக பாஜக மாநில  தலைவராக இருந்தபோது, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, திமுக அதிகாரப்பூர்வ பத்திரிகையான  முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்று பேசியிருந்தார்.

இதை எதிர்த்து, அவர்மீது முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்பி, ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தற்போது எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி, சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் முருகனுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து முருகன் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில், தன்மீதான  வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் எனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மே 2-ம் தேதி எல்.முருகன் விசாரணைக்கு ஆஜராக விலக்களித்து, விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.