சென்னை: மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் எனவும், அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்களுக் கான நிர்வாகப் பயிற்சி முகாமில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி உறுப்பினர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார. ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் அவரது பகுதியில் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளிப்பார்கள். அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்து பெரிய மரியாதையை வார்டு கவுன்சிலர்களுக்கு கிடைக்கும் அதனால் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், வார்களில் எழும் மக்கள் பிரச்சனையை மாமன்ற கூட்டத்தில் தெரிவித்து பிரச்சனைகளை தீர்ப்பது தான் வார்டு உறுப்பினர்கள் மிகப்பெரிய கடமை. அதை மறந்து விடக்கூடாது. எந்தவித சட்ட விதிகளையும் மீறாமல் அதிகாரிகளுடனான அனுசரித்து உங்கள் பணியை ஆற்றி மக்களிடையே நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்றும், கவுன்சிலாராக சிறப்பாக செயல்பட்டால் எதிர்காலத்தில் நல்ல பதவிகள் தேடி வரும். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோதும், திருச்சி பகுதியில் திமுக வார்டு உறுப்பினரை கேட்காமல் ஒரு வழக்கைக் கூட காவல்துறையினரால் பதிவு செய்ய முடியாது., அந்த அளவுக்கு செல்வாக்குடன் செயல்பட்டதாக தெரிவித்தார்.
சென்னையை முன்மாதிரி மாநகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று கூறியவர், சென்னை மாநகராட்சிக்கு முதலமைச்சர் தொடர்ந்து நிதி ஒதுக்கி வருகிறார் என்றார்.